பாரதிய ஜனதா கட்சியின் மூத்த பெண் தலைவர் சுமித்ரா மகாஜன் மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கும் நிலையில் மக்களவையின் துணை சபாநாயகர் பதவியை அதிமுகவுக்கு கொடுக்க பாரதிய ஜனதா முடிவு செய்திருப்பதாக டெல்லியில் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே துணைசபாநாயகராக தம்பித்துரை தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு கொடுப்பதுதான் மரபு. ஆனால் காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருப்பதால் சபாநாயகர் முடிவு செய்யும் கட்சிக்கே துணை சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதிமுகவுடன் இணக்கமான உறவை கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சித்தலைவர், மற்றும் துணை சபாநாயகர் பதவியை அதிமுகவுக்கு கொடுத்தால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுகவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என எண்ணுவதாக பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவுக்கு மக்களவையில் 37 எம்.பிக்களும், மாநிலங்களவையில் 11 எம்.பிக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.