தமிழகத்தில் பாஜக வேகமாக காலூன்றி வருகிறது. தமிழிசை செளந்திரராஜன்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததில் இருந்தே தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குழப்பமாகி வருவதோடு, ஒரு வலிமையான தலைவர் இல்லாத வெற்றிடம் தோன்றியுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப மு.க.ஸ்டாலின், சீமான், ஓபிஎஸ், தினகரன், விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்பட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதான் சரியான சமயம் என்று முடிவு செய்த பாஜக மேலிடம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தோடு பல்வேறு விதங்களில் காய்களை நகர்த்தி வருகிறது. மத்தியில் ஆட்சி அதிகாரம் இருப்பதால் வரும் பொதுத்தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடித்துவிடும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த மாவட்டம் தோறும் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், தமிழகத்தில் பாஜக வேகமாக ஓடி காலூன்ற தொடங்கிவிட்டதாகவும் கூறினார். மேலும் மணல், டாஸ்மாக்கில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுக்க பாஜகவால் மட்டுமே முடியும் என்றும் கூறியுள்ளார்.