கேரளாவிலும் தாமரை நிச்சயம் மலரும். பொன்.ராதாகிருஷ்ணன்
நவம்பர் 2ஆம் தேதி கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுவதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில் எப்போதுமே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி இருக்கும். ஆனால் இம்முறை இந்த இரு கட்சிகளுக்கும் இணையாக பாரதீய ஜனதாவும் பிரசார களத்தில் கலக்கி வருகிறது. மத்திய அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி.யுமான பொன். ராதாகிருஷ்ணன் கேரளாவில் தற்போது முகாமிட்டு சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
திருவனந்தபுரம் கரமனையில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு பல்வேறு வளர்ச்சி பணிகள் வேகமாக நடக்கிறது. பாரதீய ஜனதா கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. இதனால் கேரளாவில் பாரதீய ஜனதா கூட்டங்களுக்கு மக்கள் பெரும் அளவில் வருகிறார்கள். இங்கு கூடி இருக்கும் நீங்களே இதற்கு சாட்சி. உள்ளாட்சி தேர்தலில் இதுவரை பதவி வகித்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் பலரை 5 ஆண்டுகளாக காணவில்லை என வார்டு மக்கள் தெரிவித்தனர்.
தேர்தலுக்கு மட்டுமே மக்கள் முன் காட்சி அளிக்கும் அவர்கள் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள். இதை மக்கள் புரிந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் பலர் வெற்றி பெறுவது உறுதி. அடுத்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் கேரளாவில் தாமரை மலர்வது நிச்சயம் நடைபெறும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
English Summary : BJP will won in Kerala also said Pon.Radhakrishnan