மகாராஷ்டிரா மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு. பா.ஜனதா அரசு வெற்றி!

maharashtraமகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பாரதிய ஜனதா கட்சி அரசு வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் பட்னாவிஸ் வெற்றி பெற்றதால் பாஜக பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

நேற்று மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குரல் ஓட்டு மூலம் நடைபெற்றது.  இந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் அரசுக்கு எதிராக வாக்களித்த போதிலும், தேசியவாத காங்கிரஸ் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளாமல் வாக்கெடுப்பை புறக்கணித்ததால் பாஜக அரசுக்கு போதுமான ஆதரவு கிடைத்தது. மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ. வும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதாவை ஆதரித்தார்.

இந்நிலையில் மகாராஷ்ட்ரா சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்புக்கு முன்னர் நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா கட்சியின்   ஹரிபாவ் பாக்தே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே குரல் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பிரித்விராஜ் சவாண், பா.ஜனதா அரசு தனது பெரும்பான்மையை மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தங்களுடைய கோரிக்கையை நிராகரித்த பா.ஜனதா அரசு ராஜினாமா செய்ய வேண்டும். மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை சட்டசபையை நடத்தவிட மாட்டோம். இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முறையிடுவோம்” என மகாராஷ்ட்ரா பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறியுள்ளார். அதேப்போன்று சிவசேனாவும் குரல் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply