வெளிநாடுகளில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்தவர்கள் தொடர்பாக 24 ஆயிரத்து 85 ரகசிய தகவல்கள் இதுவரை இந்திய அரசுக்கு கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணத்தை மீட்க அரசு எடுத்த தீவிர முயற்சிகளின் பலனாக இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.
ஸ்வீடன், டென்மார்க், ஸ்பெயின், நியூசிலாந்து ஆகிய 12 நாடுகளில் இருந்து இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒருசில நாடுகளில் இருந்து விரைவில் முக்கிய தகவல்கள் விரைவில் தெரியவரும் என்றும் அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆட்சியை விட இந்த புதிய ஆட்சியில் கறுப்புப்பணம் தொடர்பானவர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்து வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவிருக்கும் தகவல்கள் அதிகரிக்கக்கூடும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கறுப்புப்பணத்தை மீட்பது குறித்து ஆராய உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அக்குழுவிடம் மத்திய நிதியமைச்சகம் இத்தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளது.