உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தங்களுடைய கருப்புப்பணத்தை பாதுகாக்க சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். இவர்களுடைய கருப்புப்பணத்தை வெளியே கொண்டு அனைத்து நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவும் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை அந்த வங்கிகளிடம் பெறும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக தீவிர நடவடிக்கையை இந்திய அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் சுவிச் வங்கியின் மத்திய வரி நிர்வாக அமைப்பு, கருப்பு பணம் பதுக்கிவைத்திருக்கும் இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் நாற்பது பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ள சுவிஸ் மத்திய வரி நிர்வாக அமைப்பு, தங்களை பற்றிய விவரங்களை அந்தந்த நாட்டு அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என விரும்பினால் அடுத்த 30 நாட்களுக்குள்ளாக சுவிஸ் மத்திய நீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஸ்னே லதா சாஹ்னி மற்றும் சங்கீதா சாஹ்னி என்ற இரு பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களின் பிறந்த தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.