பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றது ஃபேஸ்புக்
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று மதத்திற்கு எதிரான கருத்துக்களை தனது தரவுகளில் இருந்து ஃபேஸ்புக் நிறுவனம் நீக்க ஒப்புக்கொண்டுள்ளது.
மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தானில் அண்மையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பான வழக்கு ஒன்றில், மத நம்பிக்கைக்கு எதிராக சமூக வலைதளங்களில் உலவிக் கொண்டிருக்கும் தரவுகளை நீக்க வேண்டும். இல்லையெனில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று மதத்திற்கு எதிரான கருத்துக்களை தனது தரவுகளில் இருந்து ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. இது தொடர்பான பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்று 85 சதவீத தரவுகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது என அந்நாட்டு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.