பெல்ஜியம், ஈராக்கை அடுத்து லாகூரிலும் மனித வெடிகுண்டு தாக்குதல். 70 பேர் பலி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெல்ஜியம் தலைநகரில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலால் 31 பேர் பரிதாபமாக பலியாகினர். அதனையடுத்து ஈராக்கிலும் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரத்தில் உள்ள பூங்கா ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்கதல் நடந்ததாகவும், இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 70 பேர் பரிதாபமாக உடல்சிதறி பலியானதாகவும் லாகூரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நேற்று ஈஸ்டர் தினம் என்பதால் ஏராளமான கிறிஸ்துவர்கள் லாகூரில் உள்ள இக்பால் நகரில் குல்ஷான் இ இக்பால் பூங்காவில் கூடியிருந்தனர். இந்த நேரத்தில் சரியாக நேற்று மாலை 6.40 மணிக்கு மனிதவெடிகுண்டு ஒன்று வெடித்தது. மனித வெடிகுண்டாக செயல்பட்ட நபர் தனது உடலில் 10 முதல் 15 கிலோ எடை அளவிளான வெடிப்பொருட்களை கட்டியிருந்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே உயிர்ச்சேதம் அதிகமாக இருந்ததாக லாகூர் போலீஸ் டிஐஜி ஹைதர் அஷ்ரப் கூறியுள்ளார்.