இணையதளம் மூலம் இஸ்லாம் மதத்தை இழிவு செய்த ஒருவருக்கு சவுதி அரேபியாவில் 1000 கசையடிகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நபர் பத்து ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் கூடுதலாக இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லிபரல் சவுதி நெட்வொர்க்” என்னும் இணையதளத்தை நடத்தி வரும் ரியாஃப் படாவ் என்பவர் கடந்த ஆண்டு கோடை காலத்தில் இஸ்லாமியத்திற்கு எதிரான கருத்துக்களை தனது இணையதளத்தில் பதிவு செய்தார் என்ற குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது அவருக்கு ஆயிரம் கசையடிகள் கூடுதலான தண்டனையை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ஜெட்டா நகரில் அவருக்கு முதல்கட்டமாக ஐம்பது கசையடி தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டதாகவும், அடுத்தடுத்த நாட்களில் மீதி தண்டனை அவருக்கு நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறாது. இந்தத் தண்டனையை “மிகவும் கொடூரமானது” என்றும் இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சவுதி அரேபிய அரசுக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் அதையும் மீறி அவருக்கான கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.