ரத்தக் கொழுப்புப் பரிசோதனைகள்

images

கொழுப்பு என்றாலே கெட்டது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொழுப்பில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. கொலஸ்ட்ரால், கொழுப்புப் புரதம், டிரைகிளிசெரைட்ஸ் எனக் கொழுப்பில் பலவிதம் உண்டு.

கொலஸ்ட்ரால்

‘கொலஸ்ட்ரால்’ மாமிச உணவிலிருந்து நேரடியாகக் கிடைக்கிற கொழுப்பு. உடலில் கல்லீரலும் இதைத் தயாரிக்கிறது. தேவைக்கு அதிகமாக மாவுச்சத்து உடலில் சேரும்போது, அதை கொலஸ்ட்ராலாகக் கல்லீரல் மாற்றிவிடுகிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமானால் இதயத்துக்கு ஆபத்து.

கொழுப்புப் புரதம்

உணவிலிருந்து பெறப்படும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரையாது; உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இதனால் தனியாகச் செல்ல முடியாது. எனவே, இது புரத மூலக்கூறுகளுடன் இணைந்து உடலின் பல பகுதிகளுக்குப் பயணிக்கிறது. இதற்குக் ‘கொழுப்புப் புரதம்’ (Lipo protein) என்று பெயர். இது மூன்று வகைப்படும்:

1. எல்.டி.எல். ( Low Density Lipo protein – LDL)

2. ஹெச்.டி.எல். (High Density Lipo protein – HDL)

3. வி.எல்.டி.எல். (Very Low Density Lipo protein – VLDL)

முக்கியத்துவம் என்ன?

கொழுப்புப் புரதங்களில், எல்.டி.எல்.லும் வி.எல்.டி.எல்லும் கெட்டவை. இவை கல்லீரலிலிருந்து இதயத்துக்குக் கொழுப்பை எடுத்துச் சென்று, இதயத் தமனிக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்புக்குப் பாதை போடும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயை அடைத்துப் பக்கவாதம் வருவதற்கு ஏற்பாடு செய்யும். ஆகவே, இவற்றைக் \கெட்ட கொழுப்பு’ (Bad Cholesterol) என்கிறோம்.

ஆனால் ஹெச்.டி.எல். இதயத்துக்கு நன்மை செய்கிறது. இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலில் வைத்து அதை கரைத்துவிடுகிறது. இதன்மூலம் மாரடைப்பு / பக்கவாதம் வராமல் பார்த்துக்கொள்கிறது. எனவே, இதற்கு ‘நல்ல கொழுப்பு’ (Good Cholesterol) என்று பெயர்.

டிரைகிளிசெரைட்ஸ்

‘டிரைகிளிசெரைட்ஸ்’ என்பது கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசெரால் கலந்த கொழுப்பு. ரத்தக் குழாய்களைத் தடிக்க வைத்து, ரத்த ஓட்டத்தை நிறுத்தக்கூடிய தன்மை இதற்கு உண்டு. மேலும் இது கொலஸ்ட்ரால், பாஸ்போ லிப்பிட்ஸ், புரதம் ஆகியவற்றுடன் இணைந்து வி.எல்.டி.எல். கொழுப்பை உற்பத்தி செய்கிறது. இப்படிக் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதால், இதுவும் இதயத்துக்கும் மூளைக்கும் ஆகாத பொருள்தான்.

உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இருக்கும் விகிதத்தைக் கண்டறிய ஒரு பரிசோதனை உதவுகிறது. அதுதான், லிப்பிட் ஃபுரொபைல் (Lipid Profile ) பரிசோதனை

மேற்சொன்ன ஐந்து கொழுப்புகளையும் ரத்தத்தில் பரிசோதித்துப் பார்ப்பதற்கு ‘லிப்பிட் புரொஃபைல்’ பரிசோதனை என்று பெயர்.

யாருக்குத் தேவை?

# 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாரடைப்பு நோய் வந்துள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# உடல்பருமன், இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம், ரத்த மிகைக்கொழுப்பு உள்ள வர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் இந்தச் சோதனையை வருடத்துக்கு இரண்டு முறை செய்துகொள்ள வேண்டும்.

# ரத்தக் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மொத்தக் கொலஸ்ட்ராலை மட்டும் பரிசோதித்துக் கொள்ளலாம்.

எப்படிச் செய்வது?

# இந்தப் பரிசோதனையை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

# இவர்கள், பரிசோதனைக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு வழக்கமான உணவைச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

# பரிசோதனைக்கு முதல் நாள் இரவு உணவை முடித்த பிறகு, எதையும் சாப்பிடக் கூடாது (ஃபாஸ்டிங்).

# எட்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம் கழித்து, அதாவது மறுநாள் காலையில் பரிசோதனைக்கு வர வேண்டும்.

# பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தியிருக்கக்கூடாது; புகைபிடிக்கக்கூடாது.

கொழுப்பு வகை சரியான அளவுகள்

# மொத்தக் கொலஸ்டிரால்150 முதல் 180 மி.கி. / டெ.லி. வரை

# எல்.டி.எல். 100 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக

# ஹெச்.டி.எல். ஆண்களுக்கு 40 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக;

# பெண்களுக்கு 50 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக

# வி.எல்.டி.எல் 30 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக

# டிரைகிளிசெரைட்ஸ்150 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக

இந்த அளவுகளில் கொழுப்பு அதிகம் எனத் தெரிந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி கொழுப்பைக் குறைப்பதற்கான மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, உடல்பருமனைக் குறைப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவை.

கவனம் தேவை

# ஹெச்.டி.எல். 60 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு இதயத்துக்கு வரவுள்ள ஆபத்தை உடல் இயற்கையாகவே தடுத்துவிடும்.

# எல்.டி.எல். 160 மி.கி. . டெ.லி.க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இதயத்துக்கு ஆபத்து வரலாம்.

Leave a Reply