ரத்த ஓட்டம் தடைபட்டால்…?

images (4)

கால் பகுதிகளுக்குத் தேவையான பிராண வாயுவை ஏந்திச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர் தடித்துப் போனாலோ, உட்புற விட்டம் சுருங்கினாலோ, ரத்தத்தின் வேக அழுத்தம் குறைந்து போகும் தறுவாயில், கடுமையான வலி, எரிச்சல், ரத்த ஓட்டத் தடை போன்ற உபாதைகள் தோன்றக் கூடும்.

புகை, மதுபானம், அதிகம் நேரம் கால்களைத் தொங்க விட்டு வேலை செய்தல், அதிகம் நடந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம், சைக்கிள் சவாரி, நீச்சல், வண்டி ஓட்டுதல் போன்ற செயல்களால், கால் பகுதிகளிலுள்ள ரத்தக் குழாய்கள் வலுவிழக்கக் கூடும்.

சர்க்கரை உபாதையில், ரத்த நாளங்கள், தசைநார்கள் போன்றவை விரைவில் செயலிழக்கும் ஆபத்திருப்பதால், அவற்றை வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தமும், சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய அவசியமுமிருக்கிறது.

இரவில் நன்றாக உறங்கி காலையில் எழுந்ததும், ரத்தக் குழாய்களுக்குத் தேவையான அளவு ஓய்வு கிட்டியிருப்பதால், ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய பிண்டதைலம் மற்றும் நிசோசீராதி தைலத்தை வெதுவெதுப்பாகச் சூடு செய்து பஞ்சில் முக்கி எடுத்து எரிச்சல் வலி உள்ள பகுதிகளில் சுற்றி அதன் மேல் ஒரு துணியை இறுக்கமாக அல்லாமல், மிருதுவாகக் கட்டி சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்த பிறகு, பஞ்சை எடுத்து விட்டு, வேறு ஒரு துணியால் எண்ணெய் ஊறிய பகுதியைத் துடைத்துவிடும் எளிய சிகிச்சை முறையால், ரத்தக் குழாய்களை நம்மால் மிருதுவாகச் செய்ய இயலும். அதன் ரப்பர் போன்ற தன்மையை இந்தத் தைல முறையில் ஏற்படுத்தினால், ரத்த ஓட்டம் சீராக வாய்ப்பிருக்கிறது. சுருங்கிய உட்புற விட்டம் விரியத் தொடங்கும்.

மூலிகைத் தைலங்களைக் கால்களில் தாரையாக தொடர்ந்து விழும்படி சுமார் 12 அங்குலம் மேலிருந்து பிடித்து ஊற்றும் சிகிச்சை முறையாலும், கால் எரிச்சல் வலி ரத்த ஓட்டத் தடையைக் குறைக்க உதவிடக் கூடும். தசமூலம் எனும் பத்து மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத் தண்ணீரை, எண்ணெய் ஊறிய பகுதிகளில் தாரையாக விடும் சிகிச்சை முறையும் சிறந்ததே.

அஸ்வகந்தா எனப்படும் அமுக்கரா சூரணத்தைச் சுமார் 5 கிராம் அளவில் சிறிது சூடான பாலுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட கால் ரத்தக் குழாய்களை வலுப்படுத்த முடியும். தற்சமயம் இந்தச் சூரண மருந்து தரமாக மூலிகை மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.

சர்க்கரை உபாதைக்குப் பயந்து உணவில் அதிக அளவில் கசப்பும் துவர்ப்பும் நிறைந்த உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய்கள் விரைவில் வலுவிழக்கக் கூடும். அதனால் அவற்றை மிதமாகச் சாப்பிடுவதுடன், நெய்ப்புடன் கூடிய கோதுமை, உளுந்து, எள்ளு போன்ற உணவுகளையும் மிதமாகச் சாப்பிடுதல் நலம்.

குடலில் வறட்சி ஏற்படாமலிருக்க 10 மி.லி தான்வந்திரம் அல்லது விதார்யாதி எனும் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்துகளில் ஒன்றை லேசாக உருக்கி, காலை, இரவு உணவுக்கு அரைமணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடுதல் நல்லது. குடலில் ஏற்படும் நெய்ப்பை, ரத்தக் குழாய்களின் உட்புறம் வரை கொண்டு செல்லும் வேலையை வாயு எனும் தோஷம் பெற்றிருப்பதால், அதன் வேலைத்திறன் மங்காத வகையில் இந்த மூலிகை நெய் மருந்துகள் உதவிடக் கூடும்.

இப்படி உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஏற்படும் எண்ணெய்ப் பசையால் ரத்த நாளங்களில் உண்டாகும் கடினமான தன்மையையும், அவை சுருண்டு கொள்ளும் நிலையையும் நம்மால் தவிர்க்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

Leave a Reply