முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாக வேண்டி நாகர்கோவிலில் உள்ள அ.தி.மு.க. கட்சியினர் நேற்று ரத்தத்தால் கையெழுத்திடும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று சிறையில் உள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய பேனர் ஒன்றில் இரண்டு நர்சுகளின் உதவியுடன் அ.தி.மு.க.வினர் தங்கள் கை விரல்களில் ஊசி மூலம் குத்திக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என வேண்டி, தங்கள் கைரேகையை பேனரில் பதித்து கையெழுத்திட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அ.தி.மு.க.வினர் பெருமளவில் அந்த பகுதியில் குவிந்ததால் போக்குவரத்து பாதிகப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.