இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 7 கோடிப் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. நோய் இருந்தும் அறிகுறிகள் வெளியில் தெரியாத காரணத்தால் ‘பிரீ டயாபடிஸ்’ (Pre-diabetes) எனும் நிலைமையில் உள்ளவர்கள் 8 கோடி பேர். இவர்கள் அனைவரும் தங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து, நோயின் நிலைமையைத் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்
1. அதிகமாகச் சிறுநீர் கழித்தல்.
2. அதிகத் தாகம்.
3. அதிகப் பசி.
4. உடல் சோர்வு.
5. உடல் எடை குறைதல்.
ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை யாருக்குத் தேவை?
# மேற்சொன்ன அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
# நீரிழிவு உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள், உயர் ரத்தஅழுத்தம், உடற் பருமன் உள்ளவர்கள் 30 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
# ஏற்கெனவே அதிக எடையுடன், பெரிய தலையுடன் குழந்தையைப் பெற்ற பெண்களுக்கும் மயக்கம், ஆறாத புண், அறுவைசிகிச்சை, கர்ப்பம், பல் அகற்றுதல் போன்ற சூழ்நிலைகளிலும் இப்பரிசோதனை தேவை.
ரேண்டம் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை (Random Blood Sugar RBS)
# இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
# இதில் ரத்தச் சர்க்கரை அளவு 120 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், சரியான அளவு.
# இது 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.
# முதல்முறையாக இதைச் செய்து கொள்பவர்களுக்கு இந்த அளவுகள் 141 முதல் 200 வரை இருந்தால், வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனைகளை ஒரே நாளில் செய்துகொள்ள வேண்டும்.
வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை (Fasting Blood Sugar – FBS)
# இரவில் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக 8 மணி நேரம் கழித்து, வெறும் வயிற்றில் இதைச் செய்ய வேண்டும்.
# இதில் ரத்தச் சர்க்கரை அளவு 80 முதல் 100 மி.கி./டெ.லி. என்று இருந்தால், அது சரியான அளவு. நீரிழிவு இல்லை.
# இந்த அளவு 101 முதல் 125 மி.கி./டெ.லி. என்று இருந்தால், அது நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை. அதாவது ‘பிரீ டயாபடிஸ்’. அவருக்கு நீரிழிவு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கும் அலாரம்.
# இந்த அளவு 126 மி.கி./டெ.லி. அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்பது நிச்சயம்.
சாப்பிட்ட பின் ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை (Post Prandia# Blood Sugar PPBS)
# காலையில் வழக்கமான அளவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, 2 மணி நேரம் கழித்து இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
# இந்தப் பரிசோதனை செய்யும்போது நீரிழிவு உள்ளவர் கள், வழக்கமாகச் சாப்பிடும் நீரிழிவு நோய் மாத்திரைகளையும் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.
# இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், வழக்கமான அளவில் இன்சுலினையும் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பிறகே இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும்.
# இதில் ரத்தச் சர்க்கரை 111 முதல் 140 மி.கி./டெ.லி. என்று இருந்தால், சரியான அளவு.
# இந்த அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி. என்று இருந்தால், ‘பிரீ டயாபடிஸ்’.
# இது 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது.
முதன்முதலில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று முடிவு செய்வதற்கு, வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் ரத்தச் சர்க்கரையை ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை அளவிட வேண்டும். இரண்டு முறையும் அளவுகள் அதிகமாக இருந்தால், அவருக்கு நீரிழிவு உள்ளது என்று உறுதியாகச் சொல்லலாம். ஒருமுறை ரத்தச் சர்க்கரை அதிகமாகவும், மறுமுறை சரியாகவும் இருந்தால், ‘ஓஜிடிடி’ (OGTT) பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.