ஹெச்-1பி விசாக்களுக்கு தடை வருமா? அமெரிக்கா செல்லவுள்ள இந்தியர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவுக்கு H1B விசாக்கள் மூலம் இந்தியர்கள் பணியாற்றச் செல்வதைத் தடுக்கும் வகையில் ஒரு மசோதா, அமெரிக்க நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்காவுக்கு செல்ல காத்திருக்கும் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், H1B , L-1 விசாக்களின் மூலம் அமெரிக்காவில் பணியாற்றச் செல்லும் இந்தியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
“2016ஆம் ஆண்டின் H1B , L-1 விசா சீர்திருத்தச் சட்ட மசோதா’ என்ற பெயரில் இந்த மசோதாவை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் பாஸ்க்ரெல், குடியரசு கட்சியைச் சேர்ந்த தனா ரோஹ்ரபசேர் ஆகிய 2 எம்.பி.க்களும் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்தனர்.
இந்த மசோதாவின்படி, H1B , L-1 விசாக்கள் மூலம் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்ற வருவோர் 50 பேருக்கு மிகாமலும், நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மிகாமலும் இருக்க வேண்டும். H1B , L-1 விசாக்களை மட்டுமே அமெரிக்காவில் இயங்கி வரும் இந்தியாவின் பெரிய ஐ.டி. நிறுவனங்கள் நம்பியுள்ளதால், இந்த மசோதாவால் அந்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறது. எனினும், இந்த மசோதாவை செனட் அவையில் (மேலவையில்) நிறைவேற்றிய பிறகே, அதிபர் பராக் ஒபாமா இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க முடியும்.
இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி, பாஸ்க்ரெல் பேசியதாவது: அமெரிக்காவில், திறன் வாய்ந்த, ஏராளமான தொழில் வல்லுநர்கள் உருவாகி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேலை இல்லாத சூழல் நிலவுகிறது. மேலும், வெளிநாட்டினரை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு உரிய ஊதியம் அளிக்காமலும் சுரண்டப்படுகின்றனர். அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு நியாயமற்ற முறையில் வேலைவாய்ப்புகளை மறுப்பது, விசாக்களில் வரும் அயல்நாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை மறுப்பது ஆகிய இரண்டுமே ஏற்கத்தக்கதல்ல. H1B , L-1 விசா முறைகளில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து, தவறுகளைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்று பாஸ்க்ரெல் தெரிவித்தார்.