நைஜீரியா நாட்டில் அந்நாட்டு அரசுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும்‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் நேற்று திடீரென பொதுமக்களை கொன்று குவிக்க தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கம் நிறைந்த போர்னோ மாகாணத்தில் உள்ள ஷானி என்ற கிராமத்துக்குள் அதிரடியாக 10 மோட்டார் சைக்கிள்களில் புகுந்து சாலையில் நடமாடியவர்களையும், வீடு புகுந்தும் தங்கள் கையில் வைத்திருந்த ஏ.கே.47 துப்பாக்கிகளால் பொதுமக்களை நோக்கி சுட்டனர்.
தீவிரவாதிகளின் இந்த கடுமையான தாக்குதலால் 120 பேர் வரை ஒரே இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். மேலும் வீடுகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் திரும்பிய பக்கம் முழுவதும் தீ எரிந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று ஆஸ்திராவின் புறநகரான லாஸ்கா என்ற பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கும் பலர் கொல்லப்பட்டனர். வீடுகள் தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு நைஜீரிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.