பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சரை அடித்து கொன்ற தொழிலாளர்கள்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் கடந்த சில நாட்களாக சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். புதியதாக அமல்படுத்திய சுரங்க சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பொலிவியா நாட்டின் உள்துறை இணை அமைச்சர் ருடால்போ இலானெஸ் நேற்று சுரங்கம் இருக்கும் பகுதியான பண்டுரோ என்ற பகுதிக்குச் சென்றார்.
அப்போது அமைச்சருடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் திடீரென அமைச்சரையும் அவரது காவலர்களையும் கடத்தி சென்று அமைச்சரையும் பயங்கர ஆயுதங்களால் அடித்தே கொலை செய்தனர். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களால் அமைச்சர் அடித்துக் கொலை செய்யப்பட்டதைப் பாதுகாப்பு அமைச்சர் ரேய்மி பெரைரா உறுதி செய்துள்ளார். “இது மிகவும் கோழைத்தனமான, கொடூரமான கொலை” என அமைச்சர் காஸ்லோஸ் ரொமாரியோ தொழிலாளர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில், 2 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.