பாக்தாத் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் குண்டு வெடிப்பு – 37 பேர் பலி

உலகம் முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த வேளையில் பாக்தாத் நகரில் கிறிஸ்துவ இனத்தவரை குறிவைத்து நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 37பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் நேற்று கிறிஸ்தமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த சர்ச் ஒன்றில் குண்டு வெடித்து 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியாகினர். மேலும் 38 பேர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பாக்தாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களில் அருகிலுள்ள மற்றொரு சர்ச்சில் வெடிகுண்டு வெடித்து 11 பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் காயமடைந்தனர்.

சிலமணி நேரங்களில் இரண்டு சர்ச்சுகளில் வெடிகுண்டு வெடித்ததால் நாடு முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கிறிஸ்துவர்களை குறிவைத்து தாக்குதவற்காகவே இந்த குண்டு வெடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஈராக்கில் உள்ள சுமார் 600,000 கிறிஸ்துவர்கள் இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா அமைப்புதான் காரணமாக இருக்கும் என கூறிவருகின்றனர்.

கிறிஸ்துவ சர்ச்சில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பு குறித்து பாக்தாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply