சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்ததை அடுத்து ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஜாபர்கான்பேட்டையில் ஸ்ரீதர் என்பவருக்கு நேற்றிரவு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் அந்த வெடிகுண்டு வெடிக்கும் கூறிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், சோதனை நடத்தினர். அதில், வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், தொலைபேசி மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
மர்ம தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், வெளிநாட்டிலிருந்து பேசியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. . அவர் யார், அவர் எந்த நாட்டில் இருந்து பேசினார் என்பதைக் கண்டறியும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.