சென்னையில் புத்தகத்திருவிழா கடந்த ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையானதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா நடப்பது வழக்கம். இவ்வருடமும் கடந்த 10ஆம் தேதி இந்த திருவிழா ஆரம்பித்தது. இந்த புத்தகக்கண்காட்சியை சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாகவும், ரூ.10 கோடி மதிப்பிலான 5 லட்சம் புத்தகங்கள் விற்பனையானதாகவும் பதிப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு பதிப்பகத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 36 பேர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசும்போது; ‘இந்த புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்வதால் நம்மிடம் இல்லாத புத்தகங்களை வாங்கிப்படித்து பயன்பெற ஒரு வாய்ப்பாக தமிழக மக்களுக்கு அமைந்தது. ஒரு படிப்பாளிதான் படைப்பாளியாக மாற முடியும். எழுத நினைப்பவர்கள் ஏராளமாக முதலில் படிக்க வேண்டும். இங்கு விற்பனையான புத்தகங்களின் எண்ணிக்கையில் இருந்து தமிழகத்தில் எதிர்காலத்தில் நிறைய எழுத்தாளர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்பதில் சந்தேகம் சிறிதும் இல்லை’ என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சைவ சித்தாந்த நூல் பதிப்பக உரிமையாளர் முத்துக்குமாரசுவாமி தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆண்டு 777 அரங்குகள் அமைக்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு இன்னும் கூடுதலாக 1,111 அரங்குகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.