ஒரே ஒரு நாள் வெளியில் தண்ணீர் குடித்துவிட்டாலும்கூட, உடனே சிலருக்குச் சளி பிடித்து மூக்கு ஒழுக ஆரம்பித்துவிடும், தொண்டை கட்டிக்கொள்ளும், காய்ச்சலும்கூட எட்டிப்பார்க்கலாம். டாக்டரிடம் போனால், அவர் முதலில் கேட்கும் கேள்வி, “வெளியே தண்ணீர் குடித்தீர்களா?” என்பதுதான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பாட்டில் குடிநீரை வாங்கிக் குடிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிந்ததில்லை. போகுமிடத்தில் கிடைத்த தண்ணீரைத்தான் எல்லோரும் குடித்துக்கொண்டிருந்தோம். எல்லா நேரமும் பெரிய நோய்கள் தொற்றிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. என்ன நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில், பலரும் லிட்டருக்கு 15 ரூபாய் கொடுத்து பாட்டில் குடிநீரை நம்பிக் குடிக்கிறோம்.
என்ன இருக்கிறது?
கல்யாணம்-காதுகுத்து-பிறந்தநாள்-புதுமனை புகுதல் என்று எந்த வீட்டு நிகழ்ச்சி, திருவிழா என பார்க்கும் இடமெல்லாம் பாட்டில் குடிநீரே தரப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தர வசதியாகக் குட்டிக் குட்டி பாட்டில்களில் தண்ணீர் அடைத்து விற்கப்படுகிறது. ஒவ்வொரு கொண்டாட்டம் முடிந்த பிறகும் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குப்பையின் அளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. மற்றொரு புறம் இவ்வளவு செலவு செய்து குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கிறதா?
இல்லை என்கிறது ‘அறிவியல், சுற்றுச்சூழல் மையம்’ (சி.எஸ்.இ.) 2003-ல் நடத்திய பரிசோதனை முடிவு. இந்தப் பரிசோதனைக்காக மும்பை, டெல்லியில் சேகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீர் மாதிரிகளில் நாம் எதிர்பார்ப்பதை விடவும், மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்கின்றன. பாதுகாப்பான குடிநீருக்காகத் தரநிர்ணயம் செய்யப்பட்ட அளவை விடவும், அதிகப் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இவற்றில் நிறைந்திருந்தன. குறைந்தபட்சம் ஐந்து பூச்சிக்கொல்லிகள் இருந்திருக்கின்றன.
எப்படி வந்தது?
இந்த வேதியியல் பகுப்பாய்வு பரிசோதனையை டெல்லியைச் சேர்ந்த சி.எஸ்.இ. மாசுபாடு கண்காணிப்பு ஆய்வகம் மேற்கொண்டது. அதில், அதிகம் விற்பனையாகும் பிரபல வணிக நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் வயல்வெளியில் தெளிக்கப்படும் லிண்டேன், மாலத்தியான், குளோர்பைரிஃபாஸ், டி.டி.டி. ஆகிய பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்றைக்குப் பெரும்பாலான குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் புறநகர் பகுதிகளிலும், கிராமங்களிலும் வயல்வெளிகளுக்கு அருகேதான் தங்களுடைய சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளன. அங்கு ஆழ்குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது. இங்குதான் தொடங்குகிறது பிரச்சினை. எடுக்கப்படுவது நிலத்தடி நீர்தான் என்றாலும், பசுமைப் புரட்சி காலத்திலிருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்டுப்பாடு இல்லாமல் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுவருவதே, நிலத்தடி நீர் மாசுபாட்டுக்குக் காரணம் என்கிறது சி.எஸ்.இ நிறுவனம். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள்.
பூச்சிக்கொல்லி நீங்கவில்லை
மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தூய்மைப்படுத்தி, பாட்டிலில் அடைத்துப் பல மடங்கு விலையேற்றி பாட்டில் குடிநீர் உற்பத்தியாளர்கள் விற்கிறார்கள். நிலத்தடி நீர் கடுமையாக மாசுபட்டிருப்பது ஒருபுறம், மற்றொருபுறம் சுத்திகரிப்பு நடவடிக்கையில் பூச்சிக்கொல்லி எச்சம் முழுமையாக நீக்கப்படுவதும் இல்லை.
இன்றைக்குக் குக்கிராமத்தில் உள்ள சிறிய கடைகளிலும்கூட பாட்டில் குடிநீர் கிடைக்கிறது. வீடுகளுக்கான குடிநீர் தேவைக்குத் தனித்தனி பாட்டில்களாக வாங்காவிட்டாலும், சென்னை போன்ற நகரங்களில் பப்பிள் டாப் பிளாஸ்டிக் கலன்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான் வாங்கப்படுகிறது. இதற்கும் மேற்கண்ட சுத்திகரிப்பு முறையே பின்பற்றப்படுவதால், அவற்றிலும் பூச்சிக்கொல்லி எச்சம் இருக்கலாம்.
படியும் நஞ்சு
இருந்தபோதும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குறைவாகத்தானே குடிக்கிறோம் என்று சிலர் நினைக்கலாம். நம்மில் பெரும்பாலானோர் அதை அனுதினமும் குடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் பூச்சிக்கொல்லி எச்சங்களால் யாரும் உடனடியாக இறந்துபோய்விட மாட்டார்கள் என்பது உண்மைதான். அதேநேரம் நம் உடலில் உள்ள கொழுப்பின் மீது இந்த எச்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் படிவதால், சீரமைக்க முடியாத உடல்நலக் கோளாறுகள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
பயமுறுத்தும் பாதிப்புகள்
பாட்டில் குடிநீரில் இருக்கும் நஞ்சு நீண்ட காலமாக உடலில் சேர்வதால் புற்றுநோய், கல்லீரல், சிறுநீரகங்களைச் சிதைக்கக்கூடியதாகவும், நரம்புமண்டலக் கோளாறுகளை உருவாக்கக்கூடியதாகவும், நோயெதிர்ப்புசக்தி குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவிக் குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
நகரங்களில் வாழும் பெரும்பாலான கர்ப்பிணிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் குடிக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை என்னவென்று சொல்வது?
குளோர்பைரிஃபாஸ் என்ற வேதிப்பொருள் மிக மிக ஆபத்தானது. குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சியைக் கருவிலேயே பாதிக்கக்கூடியது. ஐரோப்பாவில் பூச்சிக்கொல்லி எச்சம் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவைவிட, சி.எஸ்.இ. பாட்டில் குடிநீர் பரிசோதனை மாதிரிகளில் குளோர்பைரிஃபாஸ் அளவு 400 மடங்கு அதிகமாக இருந்துள்ளது. பாட்டில் குடிநீர் மாதிரிகளில் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வுகள் இன்னும் அதிர்ச்சியளிப்பவை. அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
பாட்டில் குடிநீரில் பாக்டீரியா
சென்னையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தீமை பயக்கும் பாக்டீரியா இருப்பது சென்னை மாநகராட்சி மேற்கொண்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. சென்னையில் 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்துவருகின்றன.
இந்த நிறுவனங்களிடமிருந்து 2007-2012-ம் ஆண்டுவரையிலான காலத்தில் பரிசோதிக்கப்பட்டதில், 70 நிறுவனங்களின் பாட்டில் குடிநீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் சில நிறுவனங்கள் தரமில்லாத குடிநீரை விநியோகித்ததற்காக மீண்டும் மீண்டும் பிடிபட்டிருக்கின்றன. சுத்திகரிக்கப்படாத தண்ணீர் கேனில் அடைத்து விற்கப்படுவது இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தக் குடிநீர் மாதிரிகளில் கோலிஃபார்ம், இ. கோலி போன்ற ஆபத்தான பாக்டீரியா இருந்ததே இதற்குக் காரணம். சில மாதிரிகளில் 100 மில்லியில் இ. கோலி 1,200-ம், 100 மில்லியில் கோலிஃபார்ம் 200-ம் இருந்தன. இ. கோலி பாக்டீரியாவால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீரகச் செயலிழப்பை ஏற்படுத்தும் ஒரு வகை ஆபத்தான குறைபாடு (hemolytic uremic) உருவாகவும் வாய்ப்பு உண்டு