இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி போட்டிகளில் பங்கேற்க சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.
தென்கொரியாவில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சரிதா தேவி சிறப்பாக செயல்பட்ட போதும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனால் சரிதா தேவி கடும் அதிருப்தி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவில் வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்த சரிதா தேவி, வெண்கலப் பதக்கத்தை தன்னை வென்ற தென் கொரியா வீராங்கனைக்கு அணிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், வெண்கலப்பதக்கம் சரிதா தேவியிடமே ஒப்படைக்கப்பட்டது.
பெரும் பிரச்னையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி மற்றும் 3 பயிற்சியாளர்களை சஸ்பெண்ட் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ஆசிய போட்டிக்கான இந்தியக் குழுவுக்கு தலைமையேற்ற சுமரிவல்லாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தடையால் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டிகளில் சரிதா தேவி பங்கேற்க முடியாது.