சுயமரியாதை கொண்ட முதலமைச்சர்கள் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது. காங்கிரஸ் எச்சரிக்கை

hooda-medபிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சிகளை  சேர்ந்த முதல்வர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுவதால், எதிர்க்கட்சி முதல்வர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும், பிரதமர் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி முதல்வர்கள் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஹரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ஹரியாணா மாநிலம், கைதால் என்ற இடத்தில் நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலைத் திட்டத் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும், அம்மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவும் கலந்து கொண்டனர்.. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருசிலர் பூபிந்தர் சிங் ஹூடாவை எதிர்த்தும், பிரதமர் நரேந்திர மோடியை போற்றியும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் கடும் ஆத்திரத்துக்கு உள்ளான முதல்வர் ஹூடா, இனிமேல் மோடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் கூறியதோடு, இந்த சம்பவம் பாரதிய ஜனதாவின் திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஷகீல் அகமது ”கைதால் சம்பவம் பிரதமர் மோடியினால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. விரைவில்சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு மட்டும் பிரதமர் மோடி திட்டமிட்டு சென்று, அங்கு ஆளும் கட்சிக்கு எதிராகவும், தனக்கு சாதகமான சூழ்நிலையையும் உண்டாக்க அவர் சதி செய்து வருகிறார். இதுவரை ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய 3 மாநிலங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து விட்டார். அடுத்ததாக, ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு அவர் இன்று வியாழக்கிழமை செல்கிறார்.

எனவே ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பிரதமரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த எச்சரிக்கை காங்கிரஸ் ஆளும் முதல்வர்களுக்கு மட்டுமின்றி அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டதாக எண்ண வேண்டும். பொது நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடத்தப்படும் பிரதமர் நரேந்திர மோடியின் சதி அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை எதிர்க்கட்சியை சேர்ந்த சுயமரியாதை கொண்ட முதல்வர்கள் தவிர்க்க வேண்டும்” என்றார்.

Leave a Reply