இன்னும் சிலர் தங்களது மகனோ, மகளோ ஆடம்பரமாகவும், அவர்களைப் பார்ப்பவர்கள் அவர்களைச் சுற்றியே ஆடும் பம்பரங்களாகவும் மாறிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காகக் கவர்ச்சியான உடைகளை அணிய, பெற்றோர்களே பொறுப்பின்றி ஊக்குவிக்கிறார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.
அதனால் நல்ல குடும்பத்து இளைஞர்கள், யுவதிகள்
கூட நாகரீகமின்றி டைட்ஸிலும், ஸீ-த்ரூவிலும் சுற்றுகிறார்கள்.
சிறந்த ஃபேஷன் டிசைனர்கள், ஆடை அணிவது ஒருவரது கம்பீரத்தையும் மேன்மையையும் காட்டுவதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆனால் இன்றைய ஆடைக் கலாச்சாரத்திலுள்ள ஆணோ, பெண்ணோ தன்னிடம் உடம்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை; நல்ல மனதோ, சிறந்த அறிவோ, பிறர் மீதான பொறுப்போ தங்களிடம் இருப்பதாகக் காட்டுவதில்லை.
இதனால் எத்தனையோ இளம் உள்ளங்கள் கெட்டுச் சீரழிகின்றன. ஓடிப்போவதும் கடத்திப்போவதும் என எத்தனை எத்தனை செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன.
இளைஞர்களே! யுவதிகளே! எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம் என்ற போலித் தனமான சுதந்திரத்திலிருந்து விடுதலை பெறுங்கள்.
அருமை மாணவ – மாணவிகளே, நீங்கள் தெருவில் நடக்கும்போது எத்தனை எத்தனை அராஜகமான, மோசமான, இளம் உள்ளங்களில் முட்டாள்தனமான ஹீரோ துதிகளையும் சஞ்சலங்களையும் விதைக்கும் வக்கிரமான போஸ்டர்களைப் பார்க்கிறீர்கள்.
இணையதளத்தில் ஒரு செய்தியைத் தேடும்போது, மனதைச் சிதறடிக்கும் வகையில் வரும் ஆபாசக் காட்சிகளை நீங்கள் பார்த்தே தொலைய வேண்டியுள்ளது!
பிள்ளைகளின் தொடர்ச்சியான தவறான இணையதள பழக்கத்தால் எத்தனையோ பெற்றோர்களின் அடிவயிற்றில் அக்னி கொதித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் ஏற்படக்கூடிய பெண்களின் ஹார்மோன் இம்பேலன்ஸைப் பெற்றோர் கவனிக்கத் தவறுகிறார்கள்; சோஷியல் ஹார்மனியும் இதனால் பாதிக்கப்படுவதை யார்
தான் கவனிக்கிறார்கள்? மக்களுக்கு நல்ல செய்திகளைத் தர இன்று யார் பொறுப்புகளை சுமக்க நினைக்கிறார்கள்?
உள்ளத்தின் கதவுகள்
கண்கள் நீண்ட நேரம் டி.வி. பார்த்த பின் பலருக்கு ஒன்றும் உருப்படியாகச் செய்யத் தோன்றுவதில்லையே, ஏன்? காரணம் வேறு ஒன்றுமில்லை, உங்கள் கண்களுக்குக் காண்பதற்கான பயிற்சி இல்லை.
வேதாந்தத்தின்படி, மனிதனுக்குள்ளேயே எல்லாம் உள்ளது. ஒரு சிறுவனிடம்கூட எல்லாம் உள்ளது. அதனை விழிப்புணர்த்த வேண்டும் – இதுவே ஆசிரியரின் வேலை. சொந்த அறிவை உபயோகித்துக் கை, கால், கண், செவி முதலியவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதைச் சிறுவர்களுக்குக் கற்பித்தாலே போதும், எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்