பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரரின் ரூ.340 கோடி சொத்துக்கள் முடக்கம்.
வரி ஏய்ப்பு செய்த பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரரின் ரூ.340 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அந்நாட்டு நீதிமன்றம் முடக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் நெய்மர். இவரும் இவருடைய குடும்பத்தினர்களும் கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரை சுமார் 63 மில்லியன் ரியால்கள் வரை வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாருக்கு அடிப்படை ஆதாரங்கள் இருந்ததால் பிரேசில் நீதிமன்றம், நெய்மரின் சுமார் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதில் அவருக்கு சொந்தமான விமானமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி மேட்ரிட் நீதிமன்றத்தில் நெய்மர் பார்சிலோனா அணிக்கு மாறியதற்காக வாங்கிய தொகை குறித்தும் நெய்மரிடம் கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உண்மையில் பார்சிலோனா அணி நெய்மரை 90 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியிருந்த நிலையில் நெய்மர் 74 மில்லியன் டாலருக்கு மட்டுமே கணக்கு காட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெய்மர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் நெய்மர் குறிப்பிட்ட வரியை செலுத்திவிட்டால் அவருக்கு சிறை தண்டனை இருக்காது என்று அந்நாட்டு சட்ட வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர்.