பிரேசில் விமான விபத்தில் அதிபர் வேட்பாளர் மரணம். சதி வேலை காரணமா?

brazil flight accidentபிரேசில் நாட்டில் நடந்த விமான விபத்தில் அதிபராக போட்டியிடும் வேட்பாளர் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

பிரேசில் நாட்டில் வரும் அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த அதிபர் தேர்தலில் “பிரேசிலின் பெர்னம்புகோ என்ற மாகாணத்தின் முன்னாள் கவர்னர் எட்வர்டோ கேம்போசு என்பவர் ‘பிரேசிலன் சோசலிஸ்ட் கட்சி’ சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இவர் நேற்று சிறிய ரக விமானம் ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்திற்கு கிளம்பினார்., அப்போது, எட்வர்டோ கேம்போசு பயணம் செய்த விமானம் சாண்டோஸ் என்ற நகரில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த பிரதான எஞ்சின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதனால் தரையிறங்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.  விமானம் அப்பகுதியில் இருந்த வீடுகள் மீது விழுந்துள்ளத்தால் சுமார் 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அங்குள்ள பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் கேம்போசு, விமானிகள் உள்பட அதில் பயணம் செய்த 7 பேரும் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த விமான விபத்து குறித்து விசாரணை செய்ய பிரேசிலின் தற்போதைய அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்திற்கு சதி வேலை காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதிபர் வேட்பாளரின் மறைவு காரணமாக நாடு முழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply