பிரேசில் அதிபர் பதவியை நீக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை
பிரேசில் நாட்டின் பொருளாதாரம் குறித்து தவறான தகவல் அளித்த அதிபர் டில்மா ரூஸெஃபை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வந்ததை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க 65 எம்.பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி தற்போது அதிபரை பதவி நீக்கம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
65 எம்.பி.க்கள் கொண்ட விசாரணைக் குழுவில் 38 பேர் பதவி நீக்கத்துக்கு ஆதரவாகவும், 27 பேர் பதவி நீக்கத்திற்கு எதிராகவும் வாக்களித்தனர். அடுத்த கட்டமாக, விசாரணைக் குழுவின் முடிவு நாடாளுமன்றக் கீழவையில் விவாதிக்கப்படும் என்றும் அங்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானம் நிறைவேறினால் பிரேசில் அதிபரின் பதவி காலியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை டில்மா ரூஸெஃப் வன்மையாக மறுத்துள்ளார். மேலும், பதவி நீக்க நடவடிக்கைக்குப் பொருளாதாரப் புள்ளிவிவரக் கணக்கு அடிப்படையாக முடியாது என்றும் நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியல் எதிரிகள் நடத்தும் அப்பட்டமான நாடகம்தான் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரேசில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கிறது என்கிற தோற்றத்தை அளிக்கும் விதமாக நாட்டின் வருவாயை உயர்த்திக் காட்டி, அதிபர் டில்மா ரூஸெஃப் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. கடந்த 2014-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக இந்த முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர்.