மீண்டும் பொதுவாக்கெடுப்பா? இங்கிலாந்து அரசு முக்கிய முடிவு
ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கலாமா? அல்லது வெளியேறலாமா? என்பது குறித்து ஜூன் 23-ந்தேதி அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் வெளியேறலாம் என்று 52 சதவீதம் பேர்களும், நீடிக்கலாம் என 48 சதவீதம் பேர்களும் வாக்களித்தனர். இதையடுத்து பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுக இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. மேலும் பிரதமர் கேமரூனும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் பொதுவாக்கெடுப்பின் முடிவை ஏற்காத இங்கிலாந்து அரசியல்வாதிகள் சிலர் சில அமைப்புகளுடன் இணைந்து ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது தொடர்பாக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பதிவான மொத்த ஓட்டுகளில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு தேவையான 60 சதவீத ஓட்டு கிடைக்காததால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும் வகையில் புதிய சட்டவிதியை இணைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்கு இணையதளம் வாயிலாக இதற்காக 41 லட்சம் பேர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் புதிய வாக்கெடுப்பு கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்து விட்டது.
இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்து பாராளுமன்றம் வகுத்த சட்ட விதிமுறைப்படிதான் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனவே, இந்த சட்டத்தை மதிக்கவேண்டும். குறைவான சதவீத மக்களே ஓட்டுப்போட்டனர் என்பதை காரணம் காட்டி மீண்டும் தொடக்க நிலைக்கு செல்லக்கூடாது. அரசும், பிரதமரும் இது ஒரு தலைமுறையின் ஓட்டு என்பதால் அந்த தீர்ப்பு மதிக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
பொதுவாக்கெடுப்பின்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு நாம் தயாராகவேண்டும். இதில், இங்கிலாந்து மக்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த பலன்கள் கிடைப்பதற்கு அரசு உறுதி கொண்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.