இறந்து போன தந்தையின் இதயத்திடம் ஆசி வாங்கிய மணமகள்
அமெரிக்காவில் உள்ள ஒரு இளம்பெண் தனது திருமண தினத்தன்று தந்தையின் இதயத்தை தானமாக பெற்றவரிடம் ஆசி வாங்கியுள்ளார். அவரிடம் ஆசி வாங்கியது உயிருடன் இருந்த தனது தந்தையிடம் ஆசிவாங்கிய உணர்வு ஏற்பட்டதாக அவர் கூறியது. இந்த நிகழ்ச்சி காண்போர்களை நெகிழ வைத்துள்ளது.
அமெரிக்காவில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஜெனி ஸ்டீபன் என்ற இளம்பெண். இவருடைய தந்தை கடந்த பத்து வருடங்களுக்கு முன் இறந்து போனாலும், அவருடைய இதயத்தை தானமாக பெற்றவர் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஜெனிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
திருமண தினத்தன்று தந்தையிடம் இருந்து தானமாக இதயத்தை பெற்ற தாமஸ் என்பவரை நேரில் சந்தித்து தன்னை ஆசிர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் இதயம் உள்ள பகுதியை தொட்டு வணங்கினார். இந்த நிகழ்ச்சி மணமகன் உள்பட அங்கிருந்த அனைவரையும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இதயதானம் பெற்ற தாமஸ் கூறியதாவது:‘ஜெனி எனக்கு 2 மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தில், உங்களுக்கு உள்ளிருக்கும் இதயத்தை அளித்தவரின் மகள் தான் நான். எனக்கு நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு நீங்களும் உங்களுடைய மனைவி நான்சியும் வந்து என்னை வாழ்த்தினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று எழுதியிருந்தாள்.
அவள் தனது தந்தையின் ஆசிர்வாதம் வேண்டுமென்று எழுதியிருந்த கடிதத்தை கண்டு நான் மனம் நெகிழ்ந்ததுடன், நான் ஜெனியை மகிழ்ச்சியில் கட்டித் தழுவி வாழ்த்தினேன். ஜெனி எனது நாடித்துடிப்பை கண்டு மகிழ்ச்சியடைந்ததுடன், எனது இதயத்தின் மீது கைவைத்துக்கொண்டாள். இது ஒரு அழகான நெகிழ்ச்சியான தருணம்.’ என்று கூறியுள்ளார்.