ஒரு நாள் சாம்பார், மறுநாள் காரக் குழம்பு, நேரம் இருந்தால் கூட்டு என்று பலரும் தங்கள் சமையல் எல்லையை இவற்றுடன் சுருக்கிக்கொள்வார்கள். தினமும் எப்படி விதவிதமாகச் சமைக்க முடியும் என்று அதற்குச் சமாதானமும் வைத்திருப்பார்கள். ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்தால் தினம் தினம் விருந்து சாப்பிடலாம், அதுவும் உடலுக்கு எந்த உபத்திரவமும் ஏற்படாமல் என்கிறார் திருப்பூர் கருவம்பாளையத்தைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி.
அன்றாடச் சமையலையே அற்புதமாக்குகிற ரகசியத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சுசீலா. அவர் கற்றுத் தருகிற உணவு வகைகளைச் சமைத்து, சுவைப்போம்!
என்னென்ன தேவை?
கத்தரிக்காய் – அரை கிலோ
பால் – அரை லிட்டர்
வெங்காயம் – 5
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
தக்காளி – 2
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை, பட்டை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கத்தரிக்காயை நீளவாக்கில் மெலிதாக வெட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து கரம்மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்றாக வதக்கவும். பொரித்து வைத்திருக்கும் கத்தரிக்காயைச் சேர்த்து, கொதிக்கவைத்த பாலை ஊற்றி மிதமான கொதி வந்ததும் இறக்கி விடலாம்.
சூடான சாப்பாட்டில் பிசைந்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். இடியாப்பம், சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுச் சாப்பிடலாம்.