பிரிட்டன் வாக்கெடுப்பு முடிவால் இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு அந்நாட்டு மக்கள் 51.8% பேர் ஆதரவளித்துள்ளதால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. வெளியேற வேண்டாம் என 48.2 % பேர் வாக்களித்துள்ளனர். பிரிட்டனின் இந்த முடிவு காரணமாக உலகம் முழுவதும் பங்கு வர்த்தகத்தில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய பங்குச்சந்தை இன்று காலை தொடக்கத்திலேயே வரலாறு காணாத அளவில் சென்செக்ஸ் சுமார் 1000புள்ளிகளும் நிப்டி சுமார் 300 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. அதே நேரத்தில் தங்கம், வெள்ளி விலையில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 43 ஆண்டுகளாக பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் நாடாக இருந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் 51.8 % பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் 48.2 % பேர் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலே நீடிக்க வேண்டும் எனவும் வாக்களித்துள்ளனர். பிபிசியும் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் என்று கணித்துள்ளது.
வாக்கெடுப்பின் இந்த முடிவால் டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு 9 % சரிந்துள்ளது. 1985-ல் இருந்து முதல்முறையாக பிரிட்டிஷ் நாணயமான பவுண்டின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது. பிரிட்டன் பங்குச்சந்தை இன்று மிகப்பெரிய வீழ்ச்சியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.