பிரெக்ஸிட் வாக்கெடுப்பு முடிவுகளை திரும்ப பெறலாம். அமெரிக்கா யோசனை
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக 52% மக்கள் வாக்களித்தனர். இதனால் பிரிட்டன் விரைவில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என இரு தரப்பு நிலைப்பாடுகளையும் பலர் தெரிவித்து வருகின்றனர். மேலும் மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் எனப்படும் வாக்கெடுப்பை அமல்படுத்தப்படாமல் வாக்கெடுப்பு முடிவை திரும்ப பெறலாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி யோசனை கூறியுள்ளார்.
தற்போது பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜான் கெர்ரி நேற்று பிரதமர் டேவிட் கேமரூனை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து கெர்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரிட்டன் வெளியேறுவதற்கு எந்த அவசரமும் இல்லை. இது ஒரு மிகவும் சிக்கலான முறிவு. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதை பலம் குறைவது போல் கேமரூன் உணர்கிறார். இது சரியானது. இந்த விவகாரத்தை எப்படி கையாளுவார் என்பது எனக்கு தெரியவில்லை. வாக்கெடுப்பு முடிவுகள் திரும்ப பெற பல்வேறு வழிகள் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.