நோயினால் எதிர்பாராமல் இறந்த மகளின் கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய இங்கிலாந்து பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. எனவே அந்த தாய் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மகளின் கருமுட்டையுடன் அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த 59 வயது பெண் ஒருவர் தனது மகள் மரணப்படுக்கையில் இருந்தபோது, மகளின் விருப்பத்திற்கிணங்க அவரது கருமுட்டையை தனியாக எடுத்து கருமுட்டை வங்கியில் சேமித்து வைத்தார். பின்னர் மகளின் மரணத்திற்கு பின்னர் அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக மகளின் கருமுட்டையை தனது உடலில் பொருத்தி, செயற்கை முறையில் உயிரணுக்களை அதில் செலுத்தி குழந்தை பெற விரும்பினார்.
ஆனால் அந்த பெண்ணின் முயற்சிக்கு இங்கிலாந்து அரசு அனுமதிக்கவில்லை. அந்நாட்டு சட்டங்களும் இதற்கு எதிராக இருந்ததால் அவர் அமெரிக்கா சென்று தன்னுடைய ஆசையை நிறைவேற்றி கொள்ள இங்கிலாந்து அரசிடம் அனுமதி கேட்டு காத்திருக்கின்றார். இவருடைய முயற்சிக்கு பலர் ஆதரவும், ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் இதற்கு அனுமதி கொடுத்தால் அமெரிக்காவில் இந்த கருத்தரிப்பிற்காக அவருக்கு 57 லட்சம் செலவாகும். மகளின் இறுதி ஆசைக்காக 57 லட்சமென்ன 57 கோடி கூட செலவு செய்யும் தாய்மையின் பேரன்பு.