இன்றுமுதல் பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ள இலவச அதிரடி திட்டம்
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக வெற்றிகரமாக இயங்கி வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்று ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று முதல், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் லேண்ட் லைன் வாயிலாக இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளையும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: “ஏற்கனவே, லேண்ட் லைன் வாயிலாக இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளையும் இலவச அழைப்புகளாக பி.எஸ்.என்.எல். கணக்கிட்டு வருகிறது.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் நலன்கருதி, சுதந்திர தினமான வருகின்ற 15-ம் தேதியில் இருந்து, பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும், இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் யாவும் இலவச அழைப்புகளாக கருதப்படும்.
மேலும் சுதந்திரதின சிறப்பு சலுகையாக, ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதி வரை புதிய லேண்ட் லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் நிர்மாணக் கட்டணம் (இன்ஸ்ட்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் இதர வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும்” என கூறப்பட்டு உள்ளது.