பி.எஸ்.என்.எஸ். அகண்ட அலைவரிசை சேவையில் புதிய திட்டங்கள்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஈடுகொடுத்து வாடிக்கையாளர்களை கவர புதுப்புது திட்டங்களை தீட்டி வரும் நிலயில் தற்போது அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்களைக் கவர பி.எஸ்.என்.எல். புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பி.எஸ்.என்.எல் அகண்ட அலைவரிசை சேவையில் தொடக்கக் காலத்தில் 64, 128, 256 கே.பி.பி.எஸ். என்ற அளவில் இருந்த தகவல் பரிமாற்ற வேகம் 512 கே.பி.பி.எஸ். என அதிகரித்தது. ஆனால், இணையத்திலிருந்து தகவல்கள், படங்களைப் பதிவிறக்கம் செய்வதிலும், பதிவேற்றம் செய்வதிலும் இடையூறு ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, இதர தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அகண்ட அலைவரிசைத் திட்டங்களின் தகவல் பரிமாற்ற வேகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வந்தததால் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் அதற்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பி.எஸ்.என்.எல் உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது
அகண்ட அலைவரிசைத் திட்டத்தில் தகவல் பரிமாற்ற வேகம் குறைவு, பதிவிறக்கத்தில் இடையூறு உள்ளிட்ட பிரச்னைகளை போக்கும் விதத்தில், 512-லிருந்து 1,024 கே.பி.பி.எஸ். வேகத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டணப் பயன்பாட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டண பயன்பாட்டு (எஃப்.யூ.பி.) அகண்ட அலைவரிசைத் திட்டங்களில், பி.பி.ஓ. யு.எல்.டி. ரூ. 799, ரூ. 949 ஆகியவற்றுக்கு 2 எம்.பி.பி.எஸ். வேகம் கிடைக்கும். அதோடு, 10 ஜி.பி., 20 ஜி.பி. பதிவிறக்க அளவுகளுடன், 30 நாள்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல, பி.பி.ஓ. யு.எல்.டி. ரூ. 1199 திட்டத்தில் 4 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் 30 ஜி.பி. அளவுக்கு பதிவிறக்கம் செய்யலாம். ரூ. 1449 திட்டத்தில் மட்டும் 8 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் 40 ஜி.பி. அளவுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தப் புதிய அகண்ட அலைவரிசையானது அந்தந்தப் பயன்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்ப இரட்டிப்பு வேகத்தில் செயல்படும். குறிப்பிட்ட பதிவிறக்க அளவுகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிந்துவிட்டாலும், அகண்ட அலைவரிசை திட்டம் தொடர்ந்து செயல்படும். வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் திட்டத்தைப் புதுப்பிக்க தகவல் அனுப்பப்படும். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் இந்தப் புதிய அகண்ட அலைவரிசைத் திட்டங்கள் உதவும் என்று கூறினார்.