மூன்றாவது முறையாக இலங்கை அதிபர் தேர்தலில் களத்தில் குதித்திருக்கும் ராஜபக்சேவுக்கு எதிராக நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவுஆதரவு பெருகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இலங்கையில் ராஜபக்சேவின் ஆளும் கூட்டணியில் இதுவரை அங்கம் வகித்த வந்த புத்தமத பாரம்பரிய கட்சி, அதிபர் தேர்தலில் திடீரென எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. ஜாதிக ஹேல உருமயா எனப்படும் தேசிய புத்தமத பாரம்பரியக் கட்சி, அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் இலங்கை அதிபர் ராஜபக்சே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் புத்தமத பாரம்பரிய கட்சி கையெழுத்திட்டுள்ளது. தற்போதைய ராஜபக்சேவை தோற்கடிப்பதற்காக ஆளும் கூட்டணியிலிருந்து விலகியதாகவும், ராஜபக்சேவின் சகாப்தம் முடிந்துவிட்டதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்துறையை அதிபர் ராஜபக்சே தன்னுடைய சுயநலத்திற்காக அரசியலாக்கிவிட்டதாக குற்றம்சாட்டிய ரணவக்க, அவருடைய மோசமான நடவடிக்கையால் நீதித்துறையின் சுதந்திரம் கேள்விக்குறியாகிவிட்டது என கூறியுள்ளார்.
மேலும், ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் வன்முறையை உருவாக்கி அதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என அதிபர் ராஜபக்சே அரசு முயற்சி செய்யும் என தான் அஞ்சுவதாகவும் அவர் கூறியுள்ளார்.