மக்கள் சொத்துக்கு இந்த நிலைமையா? விழிப்புணர்வை ஏற்படுத்த கர்நாடக அரசு செய்த புதிய முயற்சி
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தில் எந்த போராட்டம் நடந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது அரசு பேருந்துகள்தான். பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்துவது, பேருந்தை தீ வைத்து கொளுத்துவது ஆகிய சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேருந்துகள் மக்களின் சொத்து என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் கலவரத்தின்போது எரிக்கப்பட்ட 8 அரசுப்பேருந்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
எலும்புக்கூண்டு போல் சிதிலமடைந்து இருந்த பேருந்துகளுக்கு மாலையிட்டு, “இது உங்கள் சொத்து, எக்காரணம் கொண்டும் சேதப்படுத்தா ர், மக்கள் சொத்தை பாதுகாப்பீர்” போன்ற வாசகங்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசும்போது, “மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பேருந்துகள் மக்களுக்காக இயக்கப்படுகின்றன. மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பேருந்தை தீயிட்டுக் கொளுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நம்முடைய சொந்த மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றை எவ்வளவு பொறுப்புடன் பாதுகாக்கிறோமோ, அதே அளவுக்கு அரசுப் பேருந்துகளையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறினார்.
நேற்று காட்சிக்கு வைக்கப்பட்ட 8 பேருந்துகளும் சமீபத்தில் ஆயத்த ஆடை ஊழியர்கள் மத்திய அரசின் பி.எஃப். திட்டத்தை கண்டித்து பெங்களூருவில் நடத்திய போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.