பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம். தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அவதி.

bus strikeசம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 29 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 22ஆம் தேதி அறிவிப்பு செய்தனர்.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் கடந்த 26ஆம் தேதி நடந்த முதற்கட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து நேற்று மீண்டும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு துணை ஆணையர் யாஸ்பீன் பேகம் தலைமை தாங்கினார்.  போக்குவரத்து நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பர்ட் தினகரன், சேலம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில், அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., தே.மு.தொ.ச., பட்டாளி தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எப். ஆகிய தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததை அடுத்து திட்டமிட்டபடி இன்று 29ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

சென்னை மட்டுமின்றி திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஸ்களை இயக்காமல் தொழிலாளர்கள் இன்று நள்ளிரவு முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்

Leave a Reply