பிசினஸ் சீக்ரெட்ஸ்
பொதுவாக, பிசினஸ் ஆரம்பிக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அந்த பிசினஸில் தொடர்ந்து ஜெயிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு தழைத்து நின்று, வெற்றிகரமாக செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது.
இதற்கு முக்கியமான காரணம், இந்த பிசினஸை நடத்துகிறவர்கள் காலப்போக்கில் அப்படியே தேங்கி நின்றுவிடுவதுதான். அவர்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளாமலே போய்விடுவதால், மேற்கொண்டு வளராமலே போய்விடுகிறார்கள்.
அல்லது காலத்துக்கேற்ப தயாரிப்பு முறைகளையும் மார்க்கெட்டிங் உத்திகளையும் தொழில்நுட்பங் களையும் தங்கள் பிசினஸில் கொண்டுவந்து செயல்படுத்த முடியாமல் போகிறவர்கள் மேற்கொண்டு வளர முடியாமல் அப்படியே பின்தங்கிவிடுகிறார்கள்.
ஸ்டீவன் கோவி இதை தனது ‘7 ஹாபிட்ஸ் ஆஃப் எஃபெக்ட்டிவ் பீப்பிள்’ என்கிற புத்தகத்தில் Sharpen the Saw என்கிற அத்தியாயத்தில் இதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். எனில், நம்மை நாமே செழுமைப்படுத்திக் கொண்டு புதுப்பித்துக் கொள்வது. மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் தனது கோடாலியை அடிக்கடி கூர்மைப்படுத்தி கொள்வது போல, பிசினஸில் நமது அறிவையும் அனுபவத்தையும் கூராக்கிக் கொள்வதன் மூலம் அதை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும்.
உடல் ஆரோக்கியம் ரீதியாக, உறவு ரீதியாக, தொழில் ரீதியாக, அறிவு ரீதியாக, அனுபவம் ரீதியாக, ஆன்ம ரீதியாக என பல வகையிலும் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள முடியும்.
உதாரணமாக, உறவு ரீதியாக புதுப்பித்துக் கொள்வதை எடுத்துக் கொள்வோம். நம்முடைய உறவினர் களின் வீடுகளில் வரும் விசேஷங் களுக்கு தவறாமல் கலந்துகொள்வது உறவுகளை தொடர்ந்து புதுப்பிப்பதற்கு உதவியாக இருக்கும். உறவினர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கும்போதெல்லாம் நான் ரொம்ப பிஸி, அன்றைக்கு முக்கியமான மீட்டிங், ஆபிஸை விட்டு வரமுடியாது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் விசேஷங்களுக்கு நம் வருகையை எதிர்பார்ப்பதையே அவர்கள் விட்டுவிடுவார்கள். இதனால் நாம் நம்முடைய உறவினர்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போவோம். இதற்கு பதிலாக, முடிந்தவரை விசேஷம் நடக்கிற அன்றே கலந்து கொண்டோம் எனில், அவர்களோடு நமக்கிருக்கும் உறவு தொடர்ந்து உறுதியாக இருக்கும்.
உறவைத் தொடர்ந்து புதுப்பித்து வருவதன் மூலம் நம் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அது மாதிரி, நம் அறிவை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு வருவதன் மூலம் நம் பிசினஸ் எப்போதும் நல்லபடியாக அமைய உதவியாக இருக்கும்.
அறிவைப் புதுப்பித்துக் கொள்ள இருக்கும் சில வழிகளில் முக்கியமானது படிப்பது; படித்தபிறகு அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வது. படிப்பது என்றாலே நம்மில் பலருக்கு பிடிக்காத விஷயமாக இருக்கிறது. நான் காலேஜ்ல படிக்காதவன். எனக்கு தெரிஞ்ச அளவுலே ஒரு பிசினஸ் செய்ய ஆரம்பிச்சேன். அது இன்னைக்கு நல்லபடியா வளர்ந்திருக்கு. அவ்வளவுதானே ஒழிய, பெரிசா படிக்கிற பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாதுன்னு சொல்கிற பலரை நான் சந்தித்திருக்கிறேன்.
படிப்பதென்றால், பள்ளி, கல்லூரிப் படிப்பை நான் சொல்லவில்லை. அது ஏட்டு சுரைக்காய். அது சமைக்க உதவாது. கல்லூரியில் நான் சுமாராக படிக்கும் மாணவன்தான். பாதி விஷயங்களை புரியாமலேதான் படித்தேன். பிற்பாடு பிசினஸ் தொடங்கி, அதில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி உண்டானபோது, படிக்க ஆரம்பித்தேன். என் பிசினஸ் தொடர்பான ஒவ்வொரு துறை பற்றியும் தெளிவாக புரிந்துகொள்வதற்காக படிக்க ஆரம்பித்தேன். என் நிறுவனத்தில் ஃபைனான்ஸ் தொடர்பான சிக்கல்கள் வரும்போது அதை இன்னும் நன்றாக தெரிந்து கொள்ள அது தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படித்தேன். அப்படியும் என் சந்தேகம் தீரவில்லை எனில், இந்தத் துறையில் இருக்கும் பேராசிரியர்களை சந்தித்து என் சந்தேகங்களுக்கான விளக்கங்களைக் கேட்பேன்.
இப்படி ஒவ்வொரு துறை பற்றியும் ஒவ்வொரு காலகட்டத்தில் படிக்கும்போது என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பக்கங்கள் படித்தாலும் அதை புரிந்து படிப்பேன். அதை என் பிசினஸில் எப்படி செயல்படுத்தலாம் என்று திட்டமிடுவேன்.
ஆனால், பலரும் பிசினஸை நன்றாக செய்ய வேண்டும் என்கிற அறிவை வளர்த்துக் கொள்வதில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். அல்லது துண்டும் துக்கடாவுமாக ஏதேதோ படித்துவிட்டு, நானும் படிக்கிறேன் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அறிவு ரீதியாக நம்மை புதுப்பித்துக் கொள்வதற்கு இது சரியான அணுகுமுறை அல்ல.
பிசினஸ் ரீதியாக நம்மை நாமே வளர்த்துக் கொள்வதற்கு திட்டமிட்டு நம் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். படித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும். அறிவு ரீதியாக நாம் செய்யும் இந்த முதலீடுதான் பொருள் ரீதியான லாபத்தை நமக்கு அள்ளித் தரும். தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமே நம்முடைய உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்து, எந்த நோய் நொடியும் இல்லாமல் இருக்க முடியும் என்பது போல தினமும் இத்தனை மணி நேரத்துக்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும்.
சுயமுன்னேற்றம் தொடர்பாக பல நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. இந்தப் புத்தகங்களை தேடி தேடிப் படியுங்கள். அதில் சந்தேகம் இருந்தால், அது பற்றி நன்கு தெரிந்தவர்களுடன் கலந்துபேசி, தெளிவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். படித்ததை உங்கள் பிசினஸில் செயல்படுத்திப் பாருங்கள். மீண்டும் உங்களுக்கு வரும் கேள்விகளுக்கான பதிலைத் தேடுங்கள். இப்படித்தான் எப்போதும் நம் அறிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
பிசினஸ்மேன்கள் வெற்றிகரமாக செய்வதற்கு அடிப்படைத் தேவை நம் மனோபாவத்தில் ஏற்படும் மாற்றம். அந்த மாற்றத்தை உங்களுக்குள் விதைக்கும் சில முக்கியமான புத்தகங்களை சொல்கிறேன். இந்தப் புத்தகங்கள் எனக்கு மிகவும் பலனளித்தவை.
1. You Can Do It by Paul Hanna
2. You Can Win by Shiv Khera
3. The Magic of Thinking Big by David J. Schwartz
4. 7 Habits of Highly Effective people by Stephen R.Covey
5. 10 Natural Laws of Time and Life Management by Hyrum W.Smith
6. Attitude is Everything by Jeff Keller
7. Monk Who Sold His Ferrari by Robin Sharma
8. The Secret by Rhonda Byrne
9. The Leadership Engine by Noel M.Tichy
10. Jack Welch and the G.E. Way by Robert Slater
இந்தப் புத்தகங்களைப் படித்தால் போதும் என்று சொல்லவில்லை. இன்னும் சில நல்ல புத்தகங்களும் இருக்கலாம். அவற்றையும் தேடிப் படியுங்கள். இவை தவிர, நீங்கள் முக்கியமாக எந்தெந்தத் துறை பற்றி அறிவை வளர்த்துக் கொள்ள நினைக்கிறீர்களோ, அதிலுள்ள முக்கியமான புத்தகங்களைப் படியுங்கள். உங்கள் பிசினஸை வெற்றிகரமாக நடத்துங்கள்.
இந்தத் தொடரை இந்த அளவில் நிறைவு செய்கிறேன். புதிதாக பிசினஸ் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும், ஏற்கெனவே பிசினஸ் செய்துவருபர்களுக்கும் தங்கள் பிசினஸ் தொடர்பாக பல கேள்விகள் இருக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லக் காத்திருக்கிறேன்.
‘நான் என்ன தொழிலை செய்யலாம், தொழில் தொடங்க எங்கே கடன் கிடைக்கும்’ என்கிற மாதிரியான கேள்விகளைத் தவிர்த்து, உங்கள் பிசினஸை மேற்கொண்டு வளர்க்க முடியாதபடிக்கு பெருந்தடையாக இருக்கும் பிரச்னைக்கான விளக்கத்தைக் கேளுங்கள். உங்கள் கேள்விகளை businesssecrets@vikatan.com என்கிற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள்.