2020-ல் இந்தியாயும் 2030-ல் உலகம் முழுவதும் இந்துக்களின் பிரதேசமாக மாறிவிடும். அசோக் சிங்கால்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் 2020 ஆம் ஆண்டிற்கு இந்திய நாடு இந்துக்களின் நாடாகிவிடும் என்று அசோக் சிங்கால் நேற்று கூறியுள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அசோக் சிங்கால், ‘” நான் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்திருக்கிறேன். சாய்பாபா என்னிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதுமாக இந்துக்களின் நாடாகிவிடும். 2030 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் இந்துக்களின் பிரதேசமாக மாறிவிடும். அதற்கான புரட்சி ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் வந்த பிறகு இந்தியாவின் 800 ஆண்டுகள் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இது சாதாரண புரட்சியல்ல. இந்தியாவை ஒரு வட்டத்திற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் புரட்சி அல்ல இது. உலகத்திற்கே புதிய தத்துவங்களையும், வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தும் புரட்சி” என்று கூறியுள்ளார் அசோக் சிங்கால்.
அசோக் சிங்கால் கூறியுள்ள இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.