உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்கம், தெலுங்கானா உள்பட 10 மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகளுக்கும் 33 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வீசிய மோடி அலை இந்த தேர்தலிலும் வீசியதா என்பது தேர்தல் முடிவுக்கு பின்னர் தெரிய வரும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மைன்புரி, குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி ராஜினாம செய்த தொகுதியான வதோதரா, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்த மேடக் ஆகிய மூன்று பாராளுமன்ற தொகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 33 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
விறுவிறுப்பாகவும் எவ்வித பிரச்சனையும் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் வாக்காளர்கள் அதிக ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் மோடியின் 100 நாட்கள் ஆட்சிக்கு கிடைக்கப்போகும் மதிப்பெண்களாகவே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.