மணிமேகலை சி.ஏ… இந்தப் பட்டத்தோட ‘கோ-பார்ட்னர்ஸ்’ என் குடும்பம்தான்…”
– 45 வயதில் தான் பெற்றிருக்கும் இந்த வெற்றியைக் குடும்பத்துக்கு சமர்ப்பிக்கிறார், கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான ‘சி.ஏ.’ (அகில இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) தேர்வு முடிவுகளில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் மணிமேகலை!
அவ்வளவு சாதாரணமாக அனைவருக்கும் வசப்படக்கூடிய படிப்பல்ல சி.ஏ! ஆனால், ஆர்வத்துடன் கூடிய உழைப்பு இருந்தால், எந்தக் கல்வியையும் எந்த வயதிலும் வசப்படுத்த முடியும் என்பதை, தன் அசாத்திய வெற்றியால் நிரூபித்திருக்கும் இவர், முதல் முயற்சியிலேயே இதைச் சாதித்திருப்பது… கூடுதல் ஆச்சர்யம்! அகில இந்திய அளவில் இந்தத் தேர்வை எழுதிய சுமார் 54 ஆயிரம்பேரில், 4 ஆயிரம் பேர்தான் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களில், ஒருவராக ஜொலிக்கிறார் மணிமேகலை.
வாழ்த்துக்களைச் சேர்ப்பித்தபோது…. தான் ஆடிட்டர் ஆன கதையை நம்மிடம் பகிர ஆரம்பித்தார்…
”சொந்த ஊர், செட்டிநாட்டில் உள்ள ஒக்கூர். அப்பா, கோயம்புத்தூர்ல பிசினஸ் பண்ணிட்டிருந்ததால, இங்கேதான் பி.காம். படிச்சேன். அடுத்து ‘சி.ஏ. படிக்கலாம்’னு சின்ன ஆசை மனசுக்குள்ள இருந்துச்சு. ஆனா, பி.காம் கடைசி வருஷம் படிச்சுட்டுஇருக்கறப்பவே கல்யாணம் ஆயிடுச்சு. அப்புறம், ‘சி.ஏ.’ விஷயத்தையே மறந்துட்டேன்னும் வெச்சுக்குங்க!” என்று சிரித்த மணிமேகலை, தொடர்ந்தார்.
”முதல்ல மும்பையில குடியேறினோம். பிறகு, அவரோட வேலை காரணமா ஆப்பிரிக்காவுல இருக்கற ருவாண்டா நாட்டுக்குப் போக வேண்டியதாயிடுச்சு. கிட்டத்தட்ட 15 வருஷம் இல்லத்தரசியா வீட்டுலயேதான் இருந்தேன்! 2003-ம் வருஷம், இந்தியா திரும்பினோம். ஒரே மகன், இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்தப்ப, அவனுக்காக கோயம்புத்தூர்ல தங்கியிருந்தேன். பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க ‘சி.ஏ.’ ஜாயின் பண்ணின விஷயம்… எங்கோ அடி ஆழத்துல புதைஞ்சு, கிட்டத்தட்ட மறைஞ்சே போயிருந்த அந்த ஆசையை, எனக்குள்ள துளிர்விட வெச்சுது. இப்ப விருட்சமா வளர்ந்து நிக்கறதுக்கு இதுதான் முதல் காரணம்.
இருந்தாலும், ’40 வயசுல… படிப்பா?’னு நான் தயங்கினப்போ, ‘இந்த வயசில் நீ சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ஆனா, எங்களுக்குத்தானே பெருமை!’னு சொல்லி, ஆர்வத்தை இன்னும் தூண்டிவிட்டாங்க அப்பாவும், அம்மாவும். மாமனார், கணவர், மகன் எல்லாரும் பக்கபலமா இருந்தாங்க. சி.ஏ. படிக்கறதுக்கு வயது வரம்பு இல்லைங்கற விதி, எனக்காகவே வகுத்த மாதிரி இருந்துச்சு! நானும், சி.ஏ இன்ஸ்டிடியூட்ல சேர்ந்தேன். பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க எல்லாம் ப்ளஸ் டூ, டிகிரி முடிச்ச சின்னப் பொண்ணுங்க. அவங்களோட அம்மா வயசுல இருந்த எனக்கு, ஆரம்பத்துல என்னவோ போலத்தான் இருந்துச்சு. ஆனா, எல்லாரோடவும் சேர்ந்து, விவாதிச்சு, குழுவா படிக்க ஆரம்பிச்ச பிறகு, கொஞ்சம் கொஞ்சமா என் தயக்கங்கள் விலகிப் போயிடுச்சு!
இது, ரொம்பக் கடினமான படிப்பு. அந்தப் புத்தகங்களைப் படிக்கிறது ரொம்பக் கஷ்டம். புரிஞ்சு படிக்கணும். கவனம் சிதறக்கூடாது. இன்டர்ங்கற பிரிவுல ஏழு, ஃபைனல் பிரிவுல எட்டுனு ரெண்டுலயும் சேர்த்து மொத்தம் 15 பேப்பர் எழுதணும். ஒண்ணுல போயிட்டாகூட, திரும்ப அந்த குரூப் மொத்தத்தையும் எழுதணும். நிறைய பேர், சி.ஏ. பாஸ் பண்ணாம போறதுக்கும், கோர்ஸைத் தொடராம பாதியில விடறதுக்கும் இதுதான் முக்கிய காரணம். எனக்கும் அந்த பயம் இருந்துச்சு. ‘ஏதாவது ஒரு பேப்பர்ல தோத்துட்டா… அந்தப் பக்கம் திரும்பியே பார்க்கக் கூடாது’னு மனசுக்குள்ள முடிவெடுத்துக்கிட்டுதான் களம் இறங்கினேன்.
என் கூடச் சேர்ந்த பொண்ணுங்க, இன்டர், ஃபைனல் பிரிவு பேப்பர்ஸ் எல்லாத்தையும் சேர்த்து எழுதினாங்க. நான் தனித்தனியா எழுதினேன். அதனால, இன்டர் முடிச்சு, ஃபைனல்ஸ் வந்தப்போ என்னோட படிச்சவங்க யாருமே இல்ல. குரூப் ஸ்டடி பண்ணவோ, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கவோ முடியாம கஷ்டப்பட்டேன். கோச்சிங் சென்டர், ஆன்லைன்னு படிச்சு… 2013-ல வெற்றிகரமா முடிச்சுட்டேன்!” என்று இயல்பாகச் சிரிக்கும் மணிமேகலை, இதற்கு நடுவே… கேலி, படிப்புச் சிக்கல், குடும்பப் பிரச்னைகள் என்று பலவற்றையும் வேறு கடந்திருக்கிறார்!
”இந்த வயசுல இதெல்லாம் தேவைஇல்லாத வேலைனு காதுபடவே விமர்சனம் பண்ணினாங்க பலர். அதையெல்லாம் சாதாரணமாவே எடுத்துக்கிட்டேன். 20 வருஷமா கையெழுத்து போடறதைத் தவிர, வேற எதையுமே செய்யாம இருந்த எனக்கு, எப்படி வேகமா எழுத வரும்..? அதனால, கிளாஸ்ல நோட்ஸ் எடுக்கறதுக்கு ஆரம்பத்துல ரொம்பவே தடுமாறினேன். எந்த விசேஷத்துக்கும் சொந்த ஊருக்குப்போக முடியாததால மனவருத்தங்களைச் சுமந்தேன். கணவர், மகன்னு போதுமான நேரத்தை ஒதுக்க முடியாம தவிச்சேன்… இப்படி, இந்த டிகிரிக்கு நான் கொடுத்தது பெரிய விலை” என்று பெருமூச்சுவிடும் மணிமேகலை,
”கோவை, பெங்களூர் கம்பெனிகள்ல இருந்து இப்ப வேலைக்கான அழைப்புகள் வந்திருக்கு. ஆனா, என் குடும்பத்தை மீண்டும் இதுக்காக விட்டுத்தர வேண்டியிருக்கும்னு யோசனையா இருக்கு. அதனால இப்போதைக்கு, மதுரைக்கு போய் கணவரோட செட்டில் ஆகணும். அங்கேயே தனியாகவோ, பார்ட்னர்ஷிப்லயோ பிராக்டீஸ் ஆரம்பிக்கணும்னு ஐடியா இருக்கு. ‘பேங்க் ஆடிட்ஸ்’ல ஸ்பெஷலைஸ் பண்ணலாமானும் யோசிச்சிட்டிருக்கேன்… பார்க்கலாம்!” என்று புன்னகை மாறாமல் சொல்கிறார்!