‘‘ஒரே ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியும் என்கிற தவறான கருத்து சமீப காலமாக பரவி வருகிறது. ரத்தப் பரிசோதனை செய்து சர்க்கரை அளவு என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதைப் போன்று, புற்றுநோயை அறிந்து கொள்ள வாய்ப்பே கிடையாது. ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோயாக இருக்கலாமோ என்று சந்தேகம் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லத்தான் முடியுமே தவிர, உறுதியாகச் சொல்லிவிட முடியாது.
அப்படிச் சொல்லும்படியான ஒரு கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டால், அது மருத்துவ உலகின் மகத்தான சாதனையாகக் கருதப்படும். கண்டறிந்தவருக்கு நோபல் பரிசு கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றால் அதன் தீவிரத்தன்மையை புரிந்து கொள்ளுங்கள்.
பல நூறு வகையான புற்றுநோய்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு முறைகளில் கண்டறியப்படுகிறது. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய Mammogram முறை கையாளப்படுகிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு PapSmear, புரோஸ்டேட் எனும் பிறப்புறுப்பின் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு Prostate specific antigen போன்ற முறைகள் கையாளப்படுகின்றன. இந்த மூன்று பரிசோதனை முறைகள் மட்டுமே புற்றுநோய் இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதை உறுதிப்படுத்துபவை.
மற்றபடி எந்த உறுப்பில் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறதோ, அந்த உறுப்பிலிருந்து சிறு பகுதியை எடுத்து, அதை சோதிப்பதன் மூலம்தான் உறுதிப்படுத்த முடியும். ரத்தப் புற்றுநோய்க்கு ரத்தம் உற்பத்தியாகிற எலும்பு மஜ்ஜைகளை பரிசோதிக்க வேண்டும். பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகுதான் புற்றுநோயை உறுதிப்படுத்த முடியுமே தவிர, ஒரே சோதனையில் கண்டறிவது என்பது சாத்தியமில்லாதது!’’