பாடகர் ஜேசுதாஸ் மதம் மாறிவிட்டாரா? சுப்பிரமணியன் சுவாமியின் அடுத்த சர்ச்சை
சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டர் பக்கம் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது அனைவரும் தெரிந்ததே. ரகுராம் ராஜன் முதல் சாமானியர் வரை ஏதாவது ஒரு பிரச்சனை அவரது டுவிட்டரில் தோன்றி மறைவதுண்டு. இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் சர்ச்சை டுவிட்டர் பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸை பற்றியது.
‘ஜேசுதாஸ் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பியுள்ளார். அப்படி திரும்பியிருந்தால் அதனை இந்துக்கள் அனைவரும் வரவேற்கலாம் ‘ என்று ஒரு டுவீட்டை வெளியிட்டிருந்தார். ஆனால் சுப்பிரமணியன்சுவாமி வெளியிட்ட டுவிட்டுக்கு ஜேசுதாசின் மனைவி பிரபா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘இது போன்ற செய்திகள் எப்படி பரவுகின்றன என தெரியவில்லை ‘ என்று தெரிவித்திருந்தார்.
பிரபா ஜேசுதாஸ் மறுப்பு தெரிவித்ததையடுத்து சுப்ரமணியன்சுவாமி மீண்டும் தனது டுவிட்டரில் ‘தான் ரீட்வீட் மட்டுமே செய்தாகவும் விஷயம் உண்மையாக இருந்தால் வரவேற்பதாக மட்டுமே கருத்து பதிவிட்டேன். ஆனல் மீடியாக்கள் எனது டுவீட்டுகளை தேடி எடுத்து ‘ட்விஸ்ட் ‘ செய்து விடுகின்றன ” என பதில் அளித்துள்ளார்.
பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும் கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள தாய் மூகாம்பிகை கோயிலுக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் உள்ளவர். ஏராளமான ஐய்யப்பன் பாடல்களையும் பாடியுள்ளார். நாடு முழுவதும் உள்ள இந்து ஆன்மீகத் தளங்களுக்கு சென்று இசை கச்சேரி நடத்தி வருகிறார். 76 வயதான ஜேசுதாஸ்,14 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ, பத்மவிபூசன் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.