பாகிஸ்தானை தரையில் கிடத்த யோகாவால் முடியாது. ஆயுதங்கள்தான் தேவை. சிவசேனா

பாகிஸ்தானை தரையில் கிடத்த யோகாவால் முடியாது. ஆயுதங்கள்தான் தேவை. சிவசேனா

yoga 26கடந்த 21ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் பலர் இந்த யோகா தினத்தில் யோகா செய்தனர். இந்நிலையில் இந்த யோகா தினத்தைக் கொண்டாட முயற்சி எடுத்த மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ள சிவசேனை அதே நேரத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டால் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான “சாம்னா’வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சுமார் 130 நாடுகளை யோகா பயிற்சி மேற்கொள்ள வைத்த பிரதமர் மோடி பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் தகுதியானர். யோகாவின் மூலம் 130 நாடுகளை தரையில் கிடத்தியுள்ளார் பிரதமர். ஆனால் இப்போதைய தேவை என்ன? பாகிஸ்தானை அதேபோல தரையில் கிடத்த வேண்டும். அது யோகாவின் மூலமாக முடியாது; ஆயுதங்களின் மூலமாகவே அது சாத்தியமாகும்.

நிரந்தரமாக சவாசன (யோகா பயிற்சியின் இறுதியில் தரையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் ஆசனம்) நிலையில் இருப்பதற்கு தகுதி வாய்ந்த ஒரு நாடு பாகிஸ்தான். பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் யோகா தினத்தை எதிர்த்துள்ளனர். யோகா என்பது அறிவியல் சார்ந்த விஷயம். எனவே, அதை எதிர்க்கக் கூடாது. அந்தப் பயிற்சியால் பல விஷயங்களை சாதிக்க முடியும்.

அதேவேளையில் நமது அன்றாட வாழ்வில் விலைவாசி உயர்வு மற்றும் லஞ்சத்தால் மக்கள் படும் இன்னல்களுக்கு யோகாவால் தீர்வு கிடைக்குமா? இதற்கு விளக்கம் கிடைத்தால் பாராட்டலாம் என்று அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply