கனடா நாட்டின் ஒரே பெண் தமிழ் எம்.பி ராதிகா சிற்சபேசன் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்து பேசியதால் இலங்கை அரசினால் மிரட்டப்பட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இலங்கை யாழ்ப்பாணத்தை தாயகமாக கொண்ட ராதிகா சிற்சபேசன் என்ற 32 வயது பெண் கனடிய பாராளுமன்றத்தில் எம்.பியாக இருக்கின்றார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை சென்று அங்கு கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களிடம் கலந்துரையாடினார். அவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று ஒரு வலைத்தளத்தில் அவர் ஒரு அறிக்கையில் இலங்கையில் தாம் சுற்றுப்பயணம் செய்தபோது இலங்கை அதிகாரிகள் என்னை மிரட்டினர் என்றும், தமிழர்களை சந்தித்து பேசினால் கைது செய்து நாடு கடத்துவோம் என்று அச்சுறுத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் உலகத்தமிழர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இலங்கை அரசு இதை முற்றிலும் மறுத்துள்ளது. கனடா தூதரத்திற்கு இலங்கை அரசு தெரிவித்த விளக்கம் ஒன்றில் ராதிகாவை கைது செய்யப்போவதாக அரசு எந்த மிரட்டலையும் கொடுக்கவில்லை என்றும் நாடு கடத்தபோவதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளது.