தாமிரபரணியில் இருந்து 1000 லிட்டர் தண்ணீர் எடுக்க வெறும் ரூ.37.50. பெப்சி நிறுவனம் தண்ணீர் எடுப்பதற்கு எதிராக வழக்கு.
பிரபல குளிர்பான நிறுவனமான பெப்சி நிறுவனம் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தமிழக அரசிடம் 99 ஆண்டுகள் அனுமதி பெற்றுள்ளது. ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு வெறும் ரூ.37.50 மட்டுமே கொடுத்து தினமும் 9 லட்சம் லிட்டர் இந்த நிறுவனம் தண்ணீர் எடுக்க உள்ளது.
இதற்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயின்களின் தோழனாக இருக்கும் தாமிரபரணியில் இருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்தால் மேற்கண்ட 4 மாவட்டங்களில் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். மேலும் பருவ சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் நடைபெறாத நிலை ஏற்படும் என்று கூறி அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எம்.அப்பாவு, உயர் நீதி மன்ற மதுரை கிளையில் இதுகுறித்து பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் வி.ராம சுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பின் தலைமைச் செயலர், பொதுப் பணித்துறைச் செயலர், நெல்லை மாவட்ட ஆட்சியர், தாமிரபரணி வடிநில கோட்டப் பொறியாளர், சிப்காட் மேலாண்மை இயக்குநர், பெப்சி குளிர்பான நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆகியோர் ஜனவரி 5-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
English Summary: Case against Pepsi ’s new plant in Tamil Nadu