காஷ்மீரில் சமீபத்தில் நடந்த ஒரு பேரணியில் பாகிஸ்தான் நாட்டு கொடிகளை ஏந்திச் சென்றது தொடர்பான விவகாரத்தில் மஸரத் ஆலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான கிலானி 5 ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலை செய்யபட்டார். அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் நேற்று முன் தினம் காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கடந்த மாதம் சிறையிலிருந்து வெளிவந்த மஸ்ரத் ஆலம் தலைமையேற்று நடத்தினார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட பல இளைஞர்கள், தங்களது கைகளில் ஹுரியத் மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடிகளை ஏந்தி, அந்த நாட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதாக கூறப்பட்டது. இதுகுறித்து கடும் அதிருப்தி அடைந்துள்ள இந்திய அரசு இது ஒரு தேச விரோதமான செயல் என்று கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து மஸரத் ஆலம் கூறும்போது, “கிலானிக்கு வரவேற்பு நிகழ்ச்சியே இது. இதில் சில இளைஞர்கள் பாகிஸ்தான்) கொடியை ஏந்திச் சென்றதற்கு நான் எப்படி பொறுப்பாளியாக முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மாநிலத்தின் பொதுவான போக்காகவே இது இருந்து வருகிறது. ஒரு தனிநபரின் செயல் அல்ல இது. இதற்கு ஒரு நபரைப் பொறுப்பாளியாக்குவது சரியான செயல் அல்ல என்றே கருதுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிர்வாகிகள், அதிகாரிகள் மட்டுமே வாழ உரிமை படைத்தவர்கள் அல்லர். நாங்கள் மண்ணின் மைந்தர்கள், எங்களுக்கும் இங்கு வாழ உரிமை உள்ளது. இது எங்கள் நிலம்… என் மீது வழக்கு பதிவு செய்வது ஒன்றும் எனக்குப் புதிதல்ல” என்றார் மஸரத் ஆலம்.