ஸ்பெயின் நாட்டில் ‘கடாலான்’என்ற பகுதியை ஒருங்கிணைந்து தனிநாடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு ஸ்பெயின் நாடு ஒப்புதல் வழங்காததால், அதிருப்தி அடைந்த போராட்டக்காரர்கள், கடந்த 9–ந்தேதி அப்பகுதி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படும் என அறிவித்து இருந்தனர். தனி நாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் ‘கடாலான்’ என்ற புதியநாடு சட்டவிரோதம் என்றும் இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறி தனிநாட்டிற்கு ஸ்பெயின் அரசு தடை விதித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். தங்களுக்கு தனிநாடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பார்சிலோனா நகரில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.
இந்த மாபெரும் பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தினால் ஆன கடாலான் சுதந்திர கொடியை ஏந்தி வந்தனர். இந்த பேரணியில் போராட்டக்காரர்கள் ஸ்பெயின் நாட்டு கொடியை தீயிட்டு எரித்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. ‘‘இதுதான் எங்களுக்கு உகந்த நேரம்’’ என்பன போன்ற பேனர்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் 3 மாதத்தில் ஸ்பெயின் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறர இருக்கும் நிலையில் தேர்தலுக்கு பின்னர் அமையும் புதிய அரசு கடாலான் பிரச்சினையை கையாளும் என அரசு அறிவித்து உள்ளது.
அதற்கு பிரிவினைவாத இயக்க தலைவர் ஆர்தர் மாஸ் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். சுதந்திரம் வழங்குவது குறித்து பொதுமக்களிடம் ஓட்டுப் பதிவு மூலம் கருத்து கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.