திமுக பந்த்: மாநிலம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது

திமுக பந்த்: மாநிலம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக உள்பட 15 எதிர்க்கட்சிகள் நடத்திய மாநிலம் தழுவிய பந்த்தில் கலந்து கொண்ட 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு தந்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து காலம் கடத்தி வருகிறது. இதற்கு ஜால்ரா அடிக்கும் அடிமை அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடக்கிறது.

எனவே இதை கண்டிக்கும் வகையில் உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தமிழ்நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி உள்ளோம்.

இதுவரை தமிழ்நாட்டில் இப்படி ஒரு முழு அடைப்பு நடந்திராத அளவுக்கு மிகப்பெரிய அளவில் 100 சதவீத அளவுக்கு முழு அடைப்பு வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு ஒத்துழைத்த பல்வேறு கட்சித் தலைவர்கள், வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

சென்னையில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. மறியல் போராட்டத்தில் பங்கேற்று அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதால், இன்று மாலை நடைபெற இருந்த அனைத்துக் கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு நாளை காலை 10.30 மணிக்கு எனது தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

இதில் காவிரி உரிமை மீட்பு பயணத்தை 7-ந்தேதி திருச்சி முக்கெம்பில் இருந்து தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படும்.

இன்றைய மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைதாகி உள்ளதாக தகவல்கள் வருகிறது. தமிழகத்தில் மக்களின் போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.

மத்திய அரசு இப்போது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற வேண்டும். இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

சென்னை வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவது குறித்தும் நாளைய கூட்டத்தில் கலந்து பேசி முடிவு எடுப்போம்.

Leave a Reply