சன் டிவி ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை. முக்கிய தகவல்கள் கிடைத்ததா?

suntv

கடந்த மாதம் 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுசென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சன் டி.வி. ஊழியர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து 3 நாள்களாக விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 323 இணைப்புகளை முறைகேடாக சன் டி.வி. நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு வழங்கியதாக பிரபல ஆங்கில பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக சி.பி.ஐ. கடந்த 2013-ஆம் ஆண்டில் எப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் கௌதமன், சன் டி.வி.யின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி ஆகிய 3 பேர் கடந்த மாதம் 21-ஆம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்த அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தி,

பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விசாரிக்க அனுமதி கொடுத்தார். அதைத் தொடர்ந்து, 6-ஆம் தேதி கௌதமனிடமும், 7-ஆம் தேதி கண்ணனிடமும், 8-ஆம் தேதி ரவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ வட்டாரம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply